வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

வாழ்க ஜனநாயகம் !


மீண்டும் ஒரு அதிரடி ஷோ நடந்திருக்கிறது சென்னையில்..சென்ற முறை லா காலேஜ் மாணவர்கள் தாக்கப்பட்ட பொது கட்டப்பட்டு இருந்த காவலர்கள் கைகள் இந்த முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.


இதோ ஏதோ உணர்வுகளால் தூண்டப்பட்ட இரு பிரிவினர் இடையே நடந்த மோதல் இல்லை. சட்டத்தை காப்பற்ற வேண்டிய இரு பொறுப்பான மனிதர்களுக்கு இடையே நடந்த காட்டுமிராண்டி தனமான மோதல்.தவறு யார் பக்கம் என்று ஆராயும் பணி நமக்கு இல்லை. ஆனால் இது போன்ற அசாதரண சூழலில் இரு தரப்பினரும் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பு எப்படி இருந்திருக்கும் ?


காவல் துறை.. அரசின் வலது கரம்.சிலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சூழ்நிலைகளை ஆராய்ந்து சமயோசிதமாக செயல்படவேண்டும்.விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை கைது செய்ய ஏதோ ஒசாமாவை பிடிக்க போவது போல் சென்றுள்ளனர். கையில் ஆயுதம் . தடுக்க கேடயம் ..நிராயுதபணியாக இருந்த வழக்கறிஞர்களை தாக்கி உள்ளனர்.. வாகனங்களை சமூக விரோதிகளுக்கு உரிய ஸ்டைலில் உடைத்துள்ளனர். அடி பட்டு ரத்தம் வழியும் நிலையில் ஆம்புலன்சில் ஏற்றப்படும் மனிதரை வெறியோடு தாக்கி உள்ளனர்.பொது மக்கள் தாக்கப்பட்டு உள்ளனர். நாங்கள் எவருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை எல்லோரும் சமம் என்றவாறே ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியையும் தாக்கி உள்ளனர். பாவம் வயதான அந்த நீதிபதி அடி வாங்கி ஐயோ நிறுத்துங்கள் என்று கதறுகிறார். எல்லாம் செய்து சட்டம் ஒழுங்கை காப்பற்ற நடவடிக்கை எடுத்தோம் என்கிறார்கள்.வழக்கறிஞர்கள்.. சட்டம் வளைக்கப்படும்போது, அநியாயம் தலை எடுக்கும் பொது மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள்..நீதிமன்றங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்பதை மறந்து வழக்கிற்கு ஆஜராக வந்தவர் மேல் ஆம்லெட் போட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கான பொறி அங்கே கிளப்பப்பட்டுள்ளது.சட்டத்தை காப்பாற்றுவதில் யாருக்கு பலம் அதிகம் என்ற அதிகார போட்டியே இந்த மோதலுக்கு காரணம் என என்ன தோன்றுகிறது.எதுவானாலும் ஒரு பிரச்னையை சுமூகமாக கையாளும் பொறுப்பு அரசிற்கு உள்ளது. அதிகாரம் , ஆயுத பலம் ,ஆள் பலம் நிறைந்து உள்ள காவல் துறை சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பட மட்டுமே உபயோகிக்க படவேண்டும்.


காவல் துறை, வழக்கறிஞர் இருவரும் மக்களுக்கு சேவை செய்கிற உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள். நீதியின் இருப்பிடமான நீதிமன்றத்தில் தங்களது தனிப்பட்ட பகையை தீர்த்து கொள்ள முயன்று இருப்பது மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் தலைகுனிவு.

திங்கள், 9 பிப்ரவரி, 2009

விருது வாங்கிட்டீங்களா ?விருதுகள் கொடுக்க பட வேண்டும் .. வாங்கப்பட கூடாது.


விருதுகள் என்பவை தனிமனிதன் சமூகத்திற்கு ஆற்றிய பணி அல்லது அவரது செயலால் சமுதாயத்திற்கு விளைந்த நன்மை , தனி மனித சாதனை போன்ற வற்றிற்கு வழங்கப்படுகின்றன ..(என்று நம் நினைதுக்கொண்டுள்ளோம்.) ஆனால் தற்போது அந்த நோக்கங்கள் சிதைக்கப்பட்டு விட்டனவோ என்று தோன்றுகிறது.


நோபல் ஆஸ்கர் முதல் நம்ம ஊர் பத்மா விருதுகள் வரை சர்ச்சை இல்லாத விருதுகள் இல்லை.மிக உயரிய விருதான நோபல் கூட சிலரது வழிகாட்டுதல் பேரில் வழங்கப்பட்டன என்று செய்திகள் வருகின்றன. ஆஸ்கர் பற்றி சொல்ல வேண்டாம். திரைப்படங்கள் வியாபார நோக்கில் தயார் செய்யபடுவதால் அவைகளின் மேல் பன்னாட்டு கம்பனிகள் ஆதிக்கம் மிக அதிகம். ஏன் ? ஐஸ்வர்யா, சுஸ்மிதா என்று தொடர்ந்து இந்தியர்கள் பெற்ற விருதுகள் கூட பன்னாட்டு கம்பனிகள் இந்தியாவில் கால் பதிக்க வசதியாக உருவாக்கப்பட்டதுதான் என்று கூட ஒரு கருத்து உண்டு..தற்போது slum dog millionaire ம் அந்த குற்றச்சாட்டில் உள்ளது.


அட சினிமா கிடக்கட்டும். நம்ம பத்மா விருதுகளில் எழுந்த சர்ச்சை ஒரே தமாஷ் போங்க. காஷ்மீரில் இல்லாத ஒரு ஆளுக்கு விருது கொடுத்து இருக்கிறார்கள். (பார்த்து அவர் எதாவது தீவிர வாதியாக இருக்க போகிறார் ).இளைய ராஜா விற்கு இன்னமும் பத்மா விருது தரப்பட வில்லை. சினிமாவில் நேற்று முளைத்த காளான் களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு விருது கொடுத்து விடுகிறார்கள்.ஓரளவிற்கு சரியாக கொடுப்பது ராணுவத்திற்கு வழங்கப்படும் சக்ர விருதுகள். அதிலும் fake encounter என்று புகார். எல்லாமே சிபாரிசு, பணம், ஆள் பலம் என்று ஆனா பிறகு விருதுகளும் அதில் தப்ப வில்லை.


ஊடகங்களும் என்ன சளைத்தவர்களா ?இந்தியன் ஆப் த இயர், தமிழன் ஆப் லாஸ்ட் இயர் என்று கொடுக்க ஆரம்பித்து விட்டன. இப்படியே போனால் ஒரு கட்டத்தில் யாருக்கு விருது கொடுக்கப்பட வில்லை என தேட வேண்டி இருக்கும்.
எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு மனிதர் சாதனை செய்தால் அதில் வியக்க வேண்டியது ஒன்றும் இல்லை. அதற்காக அபினவ் சாதனையை குறைத்து சொல்ல வில்லை. அர்விந்த் கேஜ்ரிவல் போன்ற முகம் தெரியாத , சமூகத்தின் பின் புலத்தில் இருந்து வருகிற மனிதர்களின் சிறிய சாதனைகள் மதிக்கப்பட வேண்டும்ஒரு சினிமா நடிகர் செய்த சாதனையை விட சமூகத்தின் அடித்தட்டுகளில் சில மனிதர்கள் செய்யும் சாதனை மகத்தானது. பச்சோரி பெற்ற நோபல் விருதுக்கு பிறகுதான் சுற்று சூழல் பற்றி சிலர் பேசுகிறார்கள்.. பாபா ஆம்தே சாதனை அவரது அந்திம காலத்தில் தான் மதிக்கப்பட்டது.இன்னும் முகம் தெரியாத மனிதர்கள் எத்தனயோ பேர். டோனிகள், சச்சின்கள் , அபினவ் சாதனை அங்கீகரிக்கபடவேண்டியதுதான் . ஆனால் அவர்களுடன் ஒரே மேடையில் நிற்க அந்த " முகம் தெரியாத இந்தியர்களுக்கும் " தகுதி உள்ளது ..


எனவே "விருதுகள் கொடுக்க பட வேண்டும் .. " வாங்கப்பட " கூடாது. "


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

உறவுகள் ..

முன்னால் ஜனாதிபதி வெங்கடராமன் அவர்கள் இறந்தது தொடர்பான செய்திகள் சென்ற வாரம் பத்திரிகைகளில் வந்தது. சரி ஒரு நல்ல தலைவர், வயது மூப்பில் இறந்துவிட்டார் என்ற எண்ணத்தோடு நம் வருத்தத்துடன் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டோம். ஆனால் மேற்படி செய்தியோடு இணைந்து வந்த ஒரு புகைப்படம் என்னை சற்று பாதித்தது. அந்த படத்தில் மறைந்த வெங்கடராமன் அவர்களின் பூத உடலுக்கு தீ மூட ஏற்பாடுகள் நடக்கின்றது. புகைப்படத்தின் ஓரமாக கவனியுங்கள். அவர் மனைவி தன்னுடைய ஊன்றுகோலின் உதவியுடன் உடைந்து போய் இருப்பதை.

மறைந்தவரின் இழப்பை பல பக்கங்கள் சொல்லாத செய்தியை அந்த புகைப்படம் சொல்கிறது. பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த தம்பதியரின் வாழ்க்கையை அது சொல்கிறது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் முதிர்ச்சியை சொல்கிறது.
நம்மில் பலர் உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதில்லை. ஒரு மனிதர் நம்மிடம் பழகும் போது அவரை பற்றிய எண்ணங்களும் நம்மில் பதிகின்றன. அவர் உயர்ந்தவர் , நல்லவர், கெட்டவர் என்ற மதிப்பீடும் பதியபடுகின்றது. அவரின் திடீர் இழப்பு அவர் மேல் நம் வைத்திருந்த மதிப்பீடின் அடிப்படையில் நம்மை பாதிக்கின்றது . நண்பர்கள், கூட பணியாற்றுபவர்கள், உறவினர்கள் போன்றோர் பல வட்டங்களாக பழகினாலும் சிலருக்கு பத்து வருடம் முன் பார்த்த நண்பன் திடீர் என்று முன் வரும் சந்தோசத்தை எப்போதும் கூட உள்ள மனைவி தருவதில்லை. வாழ்வின் நடுவின் கொஞ்ச நேரம் வரும் சில உறவுகள் நம்மை உருவாக்கிய பெற்றோரை விட அதிக மகிழ்ச்சியை தருகின்றன. இது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுகின்றது.
வாழ்கையில் நமக்கு கிடைக்கும் பதவிகள் , பொறுப்புகள், பொருள் போன்றவை ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல நீங்கி விடுகின்றன. உறவுகள் என்றும் தொடர்கின்றன. வாழ்கையின் இறுதி படிக்கட்டுகளில் இறங்கும் போது உறவுகளே நம்மை தாங்கி பிடிக்கின்றன. அதில் முக்கியமானது மனைவி (பெண்களுக்கு கணவர்) மற்றும் நண்பர்கள். நம்மை நன்கு புரிந்து கொள்ளக்கொடிய உறவுகள். உலகின் மிக பலம் வாய்ந்த நாட்டின் தளமே பொறுப்பில் இருந்து விலகிய பின் புஷ் " இனி என்ன செய்ய போகிறீர்கள் ?" என்ற கேள்விக்கு சொன்ன பதில். " இனி என் மனைவி போட்டு தரும் காபியை ரசித்து குடிப்பேன். என் வீட்டு பராமரிப்பை பார்ப்பேன். என் நாயுடன் கொஞ்சுவேன்". எவ்வளவு பெரிய மனிதரும் இறுதியில் உறவுகளை தேடித்தான் போகிறார்கள். நம் நாட்டின் பிரதமருக்கு இதய சிகிச்சை முடிந்ததும் குடும்பத்தினர் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மட்டுமே அவருக்கு உடனடி மகிழ்ச்சியை தர முடியும் என்பதால்.
ஒரு மனிதனின் கடைசி எண்ணம் தன் உறவுகளை பற்றித்தான் இருக்கும். உறவுகளே ஒரு மனிதனை அதிகம் பாதிக்கின்றது. உங்களின் உறவுகளை புதுப்பியுங்கள். அவர்களுக்கென்று நேரம் ஒதுக்குங்கள். குறைந்த பட்சம் இரவில் உங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சாப்பிடுங்கள். நல்ல உறவுகள் உங்கள் ஆரோக்கியம், ஆயுள் கூட உதவும்..

சனி, 17 ஜனவரி, 2009

எரியும் இலங்கைஇலங்கை போர் இறுதி கட்டத்தை எட்டி விட்ட தாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். இராணுவம் இலக்கை நெருங்கி விட்டதாகவும் பிரபாகரனை சுற்றி வளைத்து விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கிளிநொச்சியில் தொடங்கி புலிகளின் கட்டுபாட்டில் உள்ள நகரங்கள் வீழ்ந்து கொண்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.. இங்கே தமிழ் நாட்டில் சிலர் உண்ணா விரதம் தொடங்கி விட்டனர்.. ஒரு வழியாக வெளிஉறவு செயலர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி இலங்கை சென்றுள்ளார். ஆனால் இலங்கை பிரச்னையில் இந்திய பல காலகட்டங்களில் எடுத்துள்ள நிலைப்பாடும் பிரந்திய வல்லரசு என்ற நிலையை அடைய அது என்ன செய்திருக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இலங்கை பிரச்னை 1983 க்கு பின் கனலாக எரியத்தொடங்கியது. அப்போது இருந்த தமிழ் அரசியல் கட்சிகள் உண்மையாகவே தமிழர்களுக்கு குரல் கொடுத்தன. போர் பயிற்சிகள், தளவாடங்கள், பொருளுதவி போன்றவை தாரளமாக அளிக்கப்பட்டது. பிரபாகரன் ஹீரோ வாக போற்றப்பட்டார். இந்திய அமைதிப்படையை அனுப்ப ராஜீவ் முடிவு செய்தது இந்த நிலையை முற்றிலுமாக மாற்ற அடித்தளம் போட்டது என்றே கூறலாம். அதுவரை இந்தியா மீது இருந்த நிலைப்பாட்டையும் புலிகள் மாற்றிக்கொள்ளும் நேரம் வந்தது. இலங்கையில் அமைதிப்படையின் செயல் பாடுகள் பல கண்டனகளை எழுப்பியது.


ராஜீவ் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கி அது வரை இலங்கை பிரச்னை மேல் இருந்த நிலைபாட்டை தலைகீழாக மாற்றியது. 1990 க்கு பின் தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தனக்கு வசதியாக இப்ப்ரச்னையில் கொள்கை களை வகுத்துக்கொன்டன. ஆதரவு குரல் கொடுத்தவர்கள் தேச துரோகிகள் என்ற முத்தரை குத்தப்பட்டனர். பொடா சட்டம் வசதிற்கேற்ப பயன் படுத்தப்பட்டது. இன்றைய சூழலில் திரை உலகினர் ஒரு சாரார் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். அந்த நோக்கம் கூட சந்தேக கண்ணோடு பார்க்கபடுகிறது
அரசியல் கட்சிகள் சட்ட மன்ற தீர்மானம் போட்டும் பிரணாப் முகர்ஜீ இன்னும் இலங்கை செல்லவில்லை. இலங்கை . இலங்கை பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார் போல் இருக்கிறது. ஆக இந்திய அரசின் நிலை " அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் என் அவசரப்பட்டு மூக்கை நுழைக்க வேண்டும் " என்று உள்ளதோ என்று என்ன தோன்றுகிறது. ஏன் என்றால் இலங்கைக்கு தார்மீக ரீதியாக உலக நாடுகளின் துணையோடு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த இந்தியாவால் முடியும். உலக அளவில் இந்த பிரச்னையை கொண்டு சென்று சிறிய நாடான இலங்கையை கட்டு படுத்த இயலும் . ஆனால் ஏன் செய்ய மறுக்கிறது ? .இலங்கை பிரச்னையில் ஒரு தெளிவான உறுதியான முடிவு எடுக்காததே காரணம். இலங்கையில் இனபடுகொலை செய்யப்படுவது தமிழர்கள் என்பதை உணர்ந்தும் உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
தமிழர்கள் கொல்லபடுவதை கண்டித்து வெறும் கண்டன அறிக்கைகள் கொடுத்து விட்டு திருமங்கலம் இடை தேர்தலில் மூழ்கி விட்டன நம் கட்சிகள். வரும் பாராளு மன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட தொடங்கி விட்டனர். கண்டன அறிக்கைகளும் கவிதைகளும் உண்ணா விரதங்களும் பதவி ராஜினாமாக்களும் சாகும் தமிழனை காப்பாற்றாது. அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தால் தமிழகம் உணர்வு பொங்க எழும். மத்திய அரசை விழித்தெழ செய்யும்.போரை நிறுத்தி மீதும் பேச்சு வார்த்தையை துவக்க கை கொடுக்கும். ஆனால் இலங்கை பிரச்னையை தேர்தலுக்கு பயன் படுத்திக்கொள்ளும் எண்ணம் இருந்தால் ...பாவம் இலங்கை தமிழர்களுக்கு அனுதாப கூட்டம் போடுவதை தவிர வேறு வழி இல்லை.

வெள்ளி, 2 ஜனவரி, 2009

உங்கள் வோட்டு !


"மறுபடியும் வந்துட்டோம்ல !" "ஆகா ! வந்துட்டாங்கையா வந்துட்டாங்கையா ! தேர்தல் வன்முறை பண்ண வந்துட்டங்கயா ! "வடிவேல் காமெடி என்றால் ரசித்து சிரித்து விட்டு போகலாம்.ஆனால் இந்திய ஜனநாயகத்தின் புற்று நோயாக உள்ளது தேர்தல் வன்முறை.

சுதந்திரம் பெற்ற சில வருடங்களுக்கு வன்முறை வாசனை இல்லாமல் ஓரளவு ஒழுங்காய் தான் நடந்தன தேர்தல்கள். ஆனால் எழுபதுக்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் பதவியை பிடிக்க என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்றே நிலைப்பாட்டை எடுத்த பின் தான் தேர்தல் வன்முறை தலை எடுத்தது. இன்று வன்முறை இல்லாத தேர்தல் இல்லை. மக்களும் அதற்கு தங்களை பழக்கி கொண்டார்கள்.எப்படி வோட்டு போட்டாலும் ஒன்றும் ஆக போவதில்லை. கட்சிகாரர்கள் கொடுக்கும் பணமாவது மிஞ்சட்டுமே என்றே எண்ணம் பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது.யாரும் சரியில்லை என்று வியாகியானம் பேசும் பெருசுகள் கூட வன்முறையை காரணம் காட்டி வோட்டுசாவடி பக்கம் வருவதில்லை.அவர்கள் போகட்டும். தேர்தலில் கட்சிகாரர்கள் வோட்டு போட்டது போக முடிவை நிர்ணயம் செய்யும் நடுநிலையாளர்கள் தைரியமாக வாக்கு சாவடி வந்து வோட்டு போடும் பாதுகாப்பான சூழ்நிலை தற்போது இல்லை.பின் எப்படி நியாயமான தேர்தல் நடக்கும்.?

தேர்தல் நடக்கும் தொகுதிக்கு மிதமிஞ்சிய பணத்தையும் அடியாட்களையும் போட்டி போட்டு அனுப்புகின்றன கட்சிகள்.ஒரு அசாதரண சூழ்நிலையை தோற்றுவித்து அதில் தங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி வெற்றி பெற கட்சிகள் முனைகின்றன.அதிலும் இடை தேர்தல்களில் வன்முறைகள் பெருமளவில் நடக்கின்றன. மக்களிடம் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இடைதேர்தலை ஒரு கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொள்கின்றன. சரி இதெல்லாம் புதுசா என்று நீங்கள் கேட்கலாம். இந்த பதிவின் நோக்கம் அதுவல்ல. வாக்காளர்கள் என்ற முறையில் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு விடை காண்போம்..

சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் தேர்தல் ஒரு உதாரணம் . மக்கள் துப்பாக்கி தோட்டாவிற்கு பயப்படாமல் வரிசையில் நின்று தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றினர். ஆக முதலில்பயப்படாமல் வாக்கு சாவடிக்கு செல்ல வேண்டும். கடிக்கிற பாம்பில் எந்த பாம்பு நல்ல பாம்பு என்பது போல் எந்த வேட்பாளரும் சுத்தமில்லை என்ற சூழ்நிலையில் படித்த , ஓரளவிற்கு சுயமாக சிந்திகக்கூடிய (!),தன்மானம் கொஞ்சமாவது உடைய ,குற்ற பின்னணி இல்லாத , நல்ல குடும்ப பின்னணி உள்ள ஒருவரை , அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்றாலும், சுயேச்சை என்றாலும் அவருக்கு வாக்கு அளிக்கலாம்.பெரிய கட்சிகளின் வேட்பாளர் யாராவது ஒருவர் வந்தால்தான் பரவாயில்லை என்று நம் நினைப்பதே மோசமான வேட்பாளர் ஜெயித்து விட வழி செய்கிறது. யாரும் பிடிக்க வில்லையா ?. " யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை "என்று தெரிவிக்க வழி உள்ளது.


நினைவிருக்கட்டும். உங்கள் இடது ஆட்காட்டி விரலில் இடப்படும் மை நம்முடைய , நம் சந்ததிஉடைய தலை எழுத்தை மற்றும் சக்தி படைத்தது. ஒவ்வொரு வோட்டும் முக்கியம்தான்.சிறிய ஒட்டு வித்யாசத்தில் ஜெயித்த பல அரசியல்வாதிகள் நாட்டின் தலைவிதியை மாற்றி உள்ளார்கள். உங்கள் ஒரு வோட்டு மீண்டும் ஒரு மும்பை தீவிரவாதத்தை உருவாக்கும் அல்லது ஒழிக்கும். நம் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு, வேலை, சுதந்திரம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் சக்தி உள்ள வோட்டு என்னும் பிரமாஸ்திரத்தை சாதாரண மூட்டை பூச்சிகளுக்கு பயந்து பிரயோகிக்காமல் விட்டு விடாதீர்கள்.

வியாழன், 18 டிசம்பர், 2008

குடியும் குடித்தனமும்

பெரியவர்கள் நம்மை வாழ்த்தும் போது " குடியும் குடித்தனமுமாக இரு "என்று வாழ்த்துவார்கள். இந்தியாவில் தற்போது உள்ள பெரும்பாலான வயசுபசங்கள் மேல்சொன்ன அறிவுரையை தப்பாமல் பின் பற்றுகிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

வேகமாக பரவும் மேல் நாட்டு கலாசாரம், நல்ல சம்பாதிக்கும் வாய்ப்பு , இதர சூழ்நிலைகள் போன்றவை இவர்களை " தண்ணியில்" தள்ளுகின்றன. முக்கியமான காரணங்கள் என்று பார்த்தால்.. " அப்பா அடிச்சார் .. நானும் அடிக்கறேன்". குடும்ப பழக்கம் காரணம். "கடன் பிரச்னை - தண்ணி அடிக்கறேன் " "பொண்டாட்டி சரியில்ல " " வேலை பளு அதிகம்" " சும்மா ஜாலிக்காக குடிக்கறேன்" காரணம் ஆயிரம் .. ஆனால் ரிசல்ட் ஒன்னுதான் .

ஒரு மிடில் கிளாஸ் மனிதன் குடிப்பதனால் என்ன நாட்டுக்கு நஷ்டம் என்று கேட்கலாம். குடிப்பதனால் பணம் கரைகிறது மனம் வலு இழக்கிறது குணம் தொலைகிறது. தன்னை மறக்கிறவன் குடும்பத்தையும் நாட்டையும் மறக்கிறான் தனி மனித செயல்பாடு வீண் அடிக்கப்படுகிறது . குடும்பத்தில் பிரச்சனை விஸ்வ ரூபம் எடுக்கிறது. பரஸ்பர நம்பிக்கை தொலைகிறது.கள்ள தொடர்புகள் உருவாகின்றது. கொலை கொள்ளை நடக்கிறது. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் கூட்டம் தலை எடுக்கிறது. பச்சை குழந்தையை கொஞ்ச வேண்டியவன் பச்சை கடை எங்கே என்று தேடி அலைகிறான். தண்ணி அடித்து தலை நிக்காமல் சென்று தடுமாறி கீழே விழுந்து தன் குடும்பத்தையும் நாட்டையும் நடு தெருவிற்கு கொண்டு செல்கிறான் குடிமகன்.திறமையும் தகுதியும் உள்ளவர்கள் கடுமையாக உழைத்து தன்னையும் நாட்டையும் மேம்படுத்த வேண்டிய வயதில் வீணாக குடித்து ஒரு சந்ததியை குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள்.

ஆரம்பத்தில் ஜாலியை குடிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல தவிர்க்க முடியாத நிலையை உருவாக்குகிறது. பின் அவனது குடும்பத்தையும் பதம் பார்க்கிறது.

இதை யார் சரி செய்வது. நாம்தான். எப்படி ? தனி மனித ஒழுக்கம் மூலம் மட்டுமே .குடிப்பவர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தால் அதன் உடல் ரீதியான விளைவுகள், அதனால் குடும்பத்துக்கும் நேரும் பிரச்சனைகள் , பண விரயம் போன்றவற்றை புரியும்படி கூறலாம். சமுதாயத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் குடிகாரன் என்ற ஒரு அடையாளத்தில் அத்தனையும் அடி பட்டு போவதை தெளிவு படுத்தலாம். குடிகாரர்கள் வெருக்கதக்கவர்கள் என்பதை அவர்கள் உணரும்படி செய்யலாம்.. செய்வோம்..

வெள்ளி, 12 டிசம்பர், 2008

"தலை" யாய கடமை

வல்லரசு நாடாக உள்ள இந்தியாவை பார்த்து மற்ற நாடுகள் பொறாமை பட ஒரு சாதனை உள்ளது. பெருமை பட ஒன்றுமில்லை. இன்றைய தேதியில் உலகில் இந்தியாவில் தான் சாலை விபத்துகள் அதிகம் என்று ஒரு புள்ளி விவரம் (பி பி சி ) சொல்கிறது.ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துகளால் இந்தியா தன்னுடைய மொத்த நாட்டு உற்பத்தியில் யில் மூன்று சதவீதத்தை இழக்கிறது.சாலை விபத்துக்கள் விளைவாக ஏற்படும் சமுதாய , பொருளாதார நஷ்டங்கள் இந்தியாவில்தான் அதிகம்.எழுபது சதவீத குடும்பங்கள் சாலை விபத்து காரணமாக உடனடியாக வறுமைகோட்டுக்கு கீழ் சென்று விடுகின்றன. சர்வ சாதரணமாக ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். இருபது லட்சம் பேர் காயமடைகின்றனர்.

அரசு எய்ட்ஸ் டி பீ , மலேரியா போன்ற வியாதிகளை ஒழிக்க ஏராளமான பணத்தை செலவு செய்கிறது. ஆனால் மேற்குறிபிட்ட நோய்களில் இறப்போரை விட அதிக அளவில் சாலை விபத்தில் இந்தியர்கள் இறக்கின்றனர்.ஆனால் அரசு இந்த எண்ணிக்கை குறைக்க சீரியசான நடவடிக்கை ஏதும் எடுத்ததாக தெரியவில்லை. சாலை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நம் ஜனங்களிடம் குறைவாகவே உள்ளது. நமக்கு அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் ஒழிய அதை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

ஏன் இந்தியாவில் மட்டும் இவ்வளவு இழப்புகள்? மக்கள் தொகை அதிகம் என்ற காரணம் சொல்லி ஜோக் அடிக்காதீர்கள். இதோ பட்டியல் . உலகிலேயே இந்தியாவில்தான் லைசென்ஸ் வாங்குவது சுலபம். சாலை விதிகள் கடுமையாக அமல்படுத்துவது இல்லை. ஹெல்மட் கட்டாயம் இல்லை. ஜாலியாக குடித்து விட்டு வண்டி ஓட்டலாம். யார் மீதாவது வண்டி ஏற்றினால் கொஞ்ச .ஸ்பீட் கண்ட்ரோல் சாதனம் வைக்க எதிர்ப்பு உள்ளது. சாலைகள் மோசமாக எப்போதும் பல்லை காட்டும். முக்கால் வாசி விதிகள் கிலோ எவ்வளவு என்பார்கள். செல் போன் பேசி டிரைவிங் செய்கிறார்கள்.


ஆக யாருக்கும் பொறுப்பில்லை என்ற நிலையே உள்ளது. அட என்னதாங்க செய்கிறது ... இதோ படிங்க. அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் உயிரின் அருமையை புரிய வைக்கலாம் . விபத்து ஏற்படுத்தினால் லைசென்ஸ் ரத்து .. விபத்து ஏற்படுத்துகிறவர் அதிக இழப்பீடு தரவேண்டும் ..லைசென்ஸ் பெற குறைந்த பட்ச வயதை ஏற்றலாம்..அனைத்து வாகனங்களில் ஸ்பீட் கண்ட்ரோல் சாதனம் கட்டாயமாக்கலாம்.சிறு வயதில் சாலை பற்றிய விழிப்புணர்வை கற்று கொடுக்கலாம்.சாலைகளை நன்றாக பராமரிக்கலாம். முக்கியமாக ஹெல்மட் அணிவதை கட்டாய மாக்கலாம்... எல்லாம் செய்யலாம். யார் செய்வது.. நாம் தான். முதலில் நாம் ஹெல்மட் அணிவோம், ஒழுங்காக சாலை விதிகளை கடைபிடிப்போம்.ஏன் என்றால் எங்கேயாவது மாட்டி உயிரை விட்டு ஆவி யான பின் இந்த மாதிரி ப்ளாக் ஓபன் செய்து படிக்க எல்லாம் முடியாதுங்க. மேலும் உங்கள் இருப்பிடத்தை உங்கள் குடும்பத்தில் வேறு யாராலும் நிரப்பிட முடியாதுங்க.இந்த ப்ளாக் படித்த ஐந்து நிமிடத்தில் எத்தனை உயிர் போனதோ ? .