வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

வாழ்க ஜனநாயகம் !


மீண்டும் ஒரு அதிரடி ஷோ நடந்திருக்கிறது சென்னையில்..சென்ற முறை லா காலேஜ் மாணவர்கள் தாக்கப்பட்ட பொது கட்டப்பட்டு இருந்த காவலர்கள் கைகள் இந்த முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.


இதோ ஏதோ உணர்வுகளால் தூண்டப்பட்ட இரு பிரிவினர் இடையே நடந்த மோதல் இல்லை. சட்டத்தை காப்பற்ற வேண்டிய இரு பொறுப்பான மனிதர்களுக்கு இடையே நடந்த காட்டுமிராண்டி தனமான மோதல்.தவறு யார் பக்கம் என்று ஆராயும் பணி நமக்கு இல்லை. ஆனால் இது போன்ற அசாதரண சூழலில் இரு தரப்பினரும் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பு எப்படி இருந்திருக்கும் ?


காவல் துறை.. அரசின் வலது கரம்.சிலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சூழ்நிலைகளை ஆராய்ந்து சமயோசிதமாக செயல்படவேண்டும்.விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை கைது செய்ய ஏதோ ஒசாமாவை பிடிக்க போவது போல் சென்றுள்ளனர். கையில் ஆயுதம் . தடுக்க கேடயம் ..நிராயுதபணியாக இருந்த வழக்கறிஞர்களை தாக்கி உள்ளனர்.. வாகனங்களை சமூக விரோதிகளுக்கு உரிய ஸ்டைலில் உடைத்துள்ளனர். அடி பட்டு ரத்தம் வழியும் நிலையில் ஆம்புலன்சில் ஏற்றப்படும் மனிதரை வெறியோடு தாக்கி உள்ளனர்.பொது மக்கள் தாக்கப்பட்டு உள்ளனர். நாங்கள் எவருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை எல்லோரும் சமம் என்றவாறே ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியையும் தாக்கி உள்ளனர். பாவம் வயதான அந்த நீதிபதி அடி வாங்கி ஐயோ நிறுத்துங்கள் என்று கதறுகிறார். எல்லாம் செய்து சட்டம் ஒழுங்கை காப்பற்ற நடவடிக்கை எடுத்தோம் என்கிறார்கள்.



வழக்கறிஞர்கள்.. சட்டம் வளைக்கப்படும்போது, அநியாயம் தலை எடுக்கும் பொது மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள்..நீதிமன்றங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்பதை மறந்து வழக்கிற்கு ஆஜராக வந்தவர் மேல் ஆம்லெட் போட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கான பொறி அங்கே கிளப்பப்பட்டுள்ளது.



சட்டத்தை காப்பாற்றுவதில் யாருக்கு பலம் அதிகம் என்ற அதிகார போட்டியே இந்த மோதலுக்கு காரணம் என என்ன தோன்றுகிறது.எதுவானாலும் ஒரு பிரச்னையை சுமூகமாக கையாளும் பொறுப்பு அரசிற்கு உள்ளது. அதிகாரம் , ஆயுத பலம் ,ஆள் பலம் நிறைந்து உள்ள காவல் துறை சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பட மட்டுமே உபயோகிக்க படவேண்டும்.


காவல் துறை, வழக்கறிஞர் இருவரும் மக்களுக்கு சேவை செய்கிற உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள். நீதியின் இருப்பிடமான நீதிமன்றத்தில் தங்களது தனிப்பட்ட பகையை தீர்த்து கொள்ள முயன்று இருப்பது மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் தலைகுனிவு.

திங்கள், 9 பிப்ரவரி, 2009

விருது வாங்கிட்டீங்களா ?



விருதுகள் கொடுக்க பட வேண்டும் .. வாங்கப்பட கூடாது.


விருதுகள் என்பவை தனிமனிதன் சமூகத்திற்கு ஆற்றிய பணி அல்லது அவரது செயலால் சமுதாயத்திற்கு விளைந்த நன்மை , தனி மனித சாதனை போன்ற வற்றிற்கு வழங்கப்படுகின்றன ..(என்று நம் நினைதுக்கொண்டுள்ளோம்.) ஆனால் தற்போது அந்த நோக்கங்கள் சிதைக்கப்பட்டு விட்டனவோ என்று தோன்றுகிறது.


நோபல் ஆஸ்கர் முதல் நம்ம ஊர் பத்மா விருதுகள் வரை சர்ச்சை இல்லாத விருதுகள் இல்லை.மிக உயரிய விருதான நோபல் கூட சிலரது வழிகாட்டுதல் பேரில் வழங்கப்பட்டன என்று செய்திகள் வருகின்றன. ஆஸ்கர் பற்றி சொல்ல வேண்டாம். திரைப்படங்கள் வியாபார நோக்கில் தயார் செய்யபடுவதால் அவைகளின் மேல் பன்னாட்டு கம்பனிகள் ஆதிக்கம் மிக அதிகம். ஏன் ? ஐஸ்வர்யா, சுஸ்மிதா என்று தொடர்ந்து இந்தியர்கள் பெற்ற விருதுகள் கூட பன்னாட்டு கம்பனிகள் இந்தியாவில் கால் பதிக்க வசதியாக உருவாக்கப்பட்டதுதான் என்று கூட ஒரு கருத்து உண்டு..தற்போது slum dog millionaire ம் அந்த குற்றச்சாட்டில் உள்ளது.


அட சினிமா கிடக்கட்டும். நம்ம பத்மா விருதுகளில் எழுந்த சர்ச்சை ஒரே தமாஷ் போங்க. காஷ்மீரில் இல்லாத ஒரு ஆளுக்கு விருது கொடுத்து இருக்கிறார்கள். (பார்த்து அவர் எதாவது தீவிர வாதியாக இருக்க போகிறார் ).இளைய ராஜா விற்கு இன்னமும் பத்மா விருது தரப்பட வில்லை. சினிமாவில் நேற்று முளைத்த காளான் களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு விருது கொடுத்து விடுகிறார்கள்.ஓரளவிற்கு சரியாக கொடுப்பது ராணுவத்திற்கு வழங்கப்படும் சக்ர விருதுகள். அதிலும் fake encounter என்று புகார். எல்லாமே சிபாரிசு, பணம், ஆள் பலம் என்று ஆனா பிறகு விருதுகளும் அதில் தப்ப வில்லை.


ஊடகங்களும் என்ன சளைத்தவர்களா ?இந்தியன் ஆப் த இயர், தமிழன் ஆப் லாஸ்ட் இயர் என்று கொடுக்க ஆரம்பித்து விட்டன. இப்படியே போனால் ஒரு கட்டத்தில் யாருக்கு விருது கொடுக்கப்பட வில்லை என தேட வேண்டி இருக்கும்.
எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு மனிதர் சாதனை செய்தால் அதில் வியக்க வேண்டியது ஒன்றும் இல்லை. அதற்காக அபினவ் சாதனையை குறைத்து சொல்ல வில்லை. அர்விந்த் கேஜ்ரிவல் போன்ற முகம் தெரியாத , சமூகத்தின் பின் புலத்தில் இருந்து வருகிற மனிதர்களின் சிறிய சாதனைகள் மதிக்கப்பட வேண்டும்ஒரு சினிமா நடிகர் செய்த சாதனையை விட சமூகத்தின் அடித்தட்டுகளில் சில மனிதர்கள் செய்யும் சாதனை மகத்தானது. பச்சோரி பெற்ற நோபல் விருதுக்கு பிறகுதான் சுற்று சூழல் பற்றி சிலர் பேசுகிறார்கள்.. பாபா ஆம்தே சாதனை அவரது அந்திம காலத்தில் தான் மதிக்கப்பட்டது.இன்னும் முகம் தெரியாத மனிதர்கள் எத்தனயோ பேர். டோனிகள், சச்சின்கள் , அபினவ் சாதனை அங்கீகரிக்கபடவேண்டியதுதான் . ஆனால் அவர்களுடன் ஒரே மேடையில் நிற்க அந்த " முகம் தெரியாத இந்தியர்களுக்கும் " தகுதி உள்ளது ..


எனவே "விருதுகள் கொடுக்க பட வேண்டும் .. " வாங்கப்பட " கூடாது. "


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

உறவுகள் ..

முன்னால் ஜனாதிபதி வெங்கடராமன் அவர்கள் இறந்தது தொடர்பான செய்திகள் சென்ற வாரம் பத்திரிகைகளில் வந்தது. சரி ஒரு நல்ல தலைவர், வயது மூப்பில் இறந்துவிட்டார் என்ற எண்ணத்தோடு நம் வருத்தத்துடன் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டோம். ஆனால் மேற்படி செய்தியோடு இணைந்து வந்த ஒரு புகைப்படம் என்னை சற்று பாதித்தது. அந்த படத்தில் மறைந்த வெங்கடராமன் அவர்களின் பூத உடலுக்கு தீ மூட ஏற்பாடுகள் நடக்கின்றது. புகைப்படத்தின் ஓரமாக கவனியுங்கள். அவர் மனைவி தன்னுடைய ஊன்றுகோலின் உதவியுடன் உடைந்து போய் இருப்பதை.

மறைந்தவரின் இழப்பை பல பக்கங்கள் சொல்லாத செய்தியை அந்த புகைப்படம் சொல்கிறது. பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த தம்பதியரின் வாழ்க்கையை அது சொல்கிறது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் முதிர்ச்சியை சொல்கிறது.
நம்மில் பலர் உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதில்லை. ஒரு மனிதர் நம்மிடம் பழகும் போது அவரை பற்றிய எண்ணங்களும் நம்மில் பதிகின்றன. அவர் உயர்ந்தவர் , நல்லவர், கெட்டவர் என்ற மதிப்பீடும் பதியபடுகின்றது. அவரின் திடீர் இழப்பு அவர் மேல் நம் வைத்திருந்த மதிப்பீடின் அடிப்படையில் நம்மை பாதிக்கின்றது . நண்பர்கள், கூட பணியாற்றுபவர்கள், உறவினர்கள் போன்றோர் பல வட்டங்களாக பழகினாலும் சிலருக்கு பத்து வருடம் முன் பார்த்த நண்பன் திடீர் என்று முன் வரும் சந்தோசத்தை எப்போதும் கூட உள்ள மனைவி தருவதில்லை. வாழ்வின் நடுவின் கொஞ்ச நேரம் வரும் சில உறவுகள் நம்மை உருவாக்கிய பெற்றோரை விட அதிக மகிழ்ச்சியை தருகின்றன. இது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுகின்றது.
வாழ்கையில் நமக்கு கிடைக்கும் பதவிகள் , பொறுப்புகள், பொருள் போன்றவை ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல நீங்கி விடுகின்றன. உறவுகள் என்றும் தொடர்கின்றன. வாழ்கையின் இறுதி படிக்கட்டுகளில் இறங்கும் போது உறவுகளே நம்மை தாங்கி பிடிக்கின்றன. அதில் முக்கியமானது மனைவி (பெண்களுக்கு கணவர்) மற்றும் நண்பர்கள். நம்மை நன்கு புரிந்து கொள்ளக்கொடிய உறவுகள். உலகின் மிக பலம் வாய்ந்த நாட்டின் தளமே பொறுப்பில் இருந்து விலகிய பின் புஷ் " இனி என்ன செய்ய போகிறீர்கள் ?" என்ற கேள்விக்கு சொன்ன பதில். " இனி என் மனைவி போட்டு தரும் காபியை ரசித்து குடிப்பேன். என் வீட்டு பராமரிப்பை பார்ப்பேன். என் நாயுடன் கொஞ்சுவேன்". எவ்வளவு பெரிய மனிதரும் இறுதியில் உறவுகளை தேடித்தான் போகிறார்கள். நம் நாட்டின் பிரதமருக்கு இதய சிகிச்சை முடிந்ததும் குடும்பத்தினர் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மட்டுமே அவருக்கு உடனடி மகிழ்ச்சியை தர முடியும் என்பதால்.
ஒரு மனிதனின் கடைசி எண்ணம் தன் உறவுகளை பற்றித்தான் இருக்கும். உறவுகளே ஒரு மனிதனை அதிகம் பாதிக்கின்றது. உங்களின் உறவுகளை புதுப்பியுங்கள். அவர்களுக்கென்று நேரம் ஒதுக்குங்கள். குறைந்த பட்சம் இரவில் உங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சாப்பிடுங்கள். நல்ல உறவுகள் உங்கள் ஆரோக்கியம், ஆயுள் கூட உதவும்..