வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

வாழ்க ஜனநாயகம் !


மீண்டும் ஒரு அதிரடி ஷோ நடந்திருக்கிறது சென்னையில்..சென்ற முறை லா காலேஜ் மாணவர்கள் தாக்கப்பட்ட பொது கட்டப்பட்டு இருந்த காவலர்கள் கைகள் இந்த முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.


இதோ ஏதோ உணர்வுகளால் தூண்டப்பட்ட இரு பிரிவினர் இடையே நடந்த மோதல் இல்லை. சட்டத்தை காப்பற்ற வேண்டிய இரு பொறுப்பான மனிதர்களுக்கு இடையே நடந்த காட்டுமிராண்டி தனமான மோதல்.தவறு யார் பக்கம் என்று ஆராயும் பணி நமக்கு இல்லை. ஆனால் இது போன்ற அசாதரண சூழலில் இரு தரப்பினரும் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பு எப்படி இருந்திருக்கும் ?


காவல் துறை.. அரசின் வலது கரம்.சிலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சூழ்நிலைகளை ஆராய்ந்து சமயோசிதமாக செயல்படவேண்டும்.விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை கைது செய்ய ஏதோ ஒசாமாவை பிடிக்க போவது போல் சென்றுள்ளனர். கையில் ஆயுதம் . தடுக்க கேடயம் ..நிராயுதபணியாக இருந்த வழக்கறிஞர்களை தாக்கி உள்ளனர்.. வாகனங்களை சமூக விரோதிகளுக்கு உரிய ஸ்டைலில் உடைத்துள்ளனர். அடி பட்டு ரத்தம் வழியும் நிலையில் ஆம்புலன்சில் ஏற்றப்படும் மனிதரை வெறியோடு தாக்கி உள்ளனர்.பொது மக்கள் தாக்கப்பட்டு உள்ளனர். நாங்கள் எவருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை எல்லோரும் சமம் என்றவாறே ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியையும் தாக்கி உள்ளனர். பாவம் வயதான அந்த நீதிபதி அடி வாங்கி ஐயோ நிறுத்துங்கள் என்று கதறுகிறார். எல்லாம் செய்து சட்டம் ஒழுங்கை காப்பற்ற நடவடிக்கை எடுத்தோம் என்கிறார்கள்.



வழக்கறிஞர்கள்.. சட்டம் வளைக்கப்படும்போது, அநியாயம் தலை எடுக்கும் பொது மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள்..நீதிமன்றங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்பதை மறந்து வழக்கிற்கு ஆஜராக வந்தவர் மேல் ஆம்லெட் போட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கான பொறி அங்கே கிளப்பப்பட்டுள்ளது.



சட்டத்தை காப்பாற்றுவதில் யாருக்கு பலம் அதிகம் என்ற அதிகார போட்டியே இந்த மோதலுக்கு காரணம் என என்ன தோன்றுகிறது.எதுவானாலும் ஒரு பிரச்னையை சுமூகமாக கையாளும் பொறுப்பு அரசிற்கு உள்ளது. அதிகாரம் , ஆயுத பலம் ,ஆள் பலம் நிறைந்து உள்ள காவல் துறை சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பட மட்டுமே உபயோகிக்க படவேண்டும்.


காவல் துறை, வழக்கறிஞர் இருவரும் மக்களுக்கு சேவை செய்கிற உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள். நீதியின் இருப்பிடமான நீதிமன்றத்தில் தங்களது தனிப்பட்ட பகையை தீர்த்து கொள்ள முயன்று இருப்பது மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் தலைகுனிவு.