சனி, 6 டிசம்பர், 2008

தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்

இந்தியாவில் சென்ற வாரம் நடத்தப்பட்ட கோர தாக்குதல்களுக்கு இவர்கள் தான் பொறுப்பு என்று அனைத்து விரல்களும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தோய்பா , ஐ எஸ் ஐ போன்றவற்றை நோக்கி குற்றம்சாட்டுகின்றன..இந்தஅமைப்புகளின் பின்னணி என்ன. பார்ப்போம் வாருங்கள்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை முடிந்த கையொடு அயல்நாடுகள் தொடர்பான உளவு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ஒரு பிரிட்டிஷ் அதிகாரியால் ஏற்படுத்தப்பட்டதே ஐ எஸ் ஐ .பின்னர் அயுப் கான் போன்ற பாக் தலைவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக ஐ எஸ் ஐ - ஐ பயன்படுத்த தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் கடிவாளத்தை பிடிக்கக் கற்றுகொண்டது ஐ எஸ் ஐ. புட்டோ காலத்தில் அதன் ஆட்டம் கட்டில் இருந்தது என்றாலும் பின் ஜியா உள் ஹக் காலத்தில் ஆட்சியை ஆக்கிரமிக்க தொடங்கியது.சோவியத்- ஆப்கன் போரின்போது அமெரிக்கா தேனும் பாலும் ஊற்றி ஐ எஸ் ஐ- ஐ வளர்த்தது. பின் எண்பதுகளின் இறுதியில் காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைத்து இன்று வரை தலைவலி கொடுத்து வருகிறது.
இன்று ஐ எஸ் ஐ பாகிஸ்தானின் அரசியலில் ஒரு அசைக்க முடியாத சக்தி. எந்த தலைமையும் இதன் பிடிக்குள் கட்டுபட்டே உள்ளனர். மீறி யாராவது ஜனநாயகம் பற்றி பேசினால் பெனசிருக்கு நேர்ந்த கதி தான். இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பே ஐ பி என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட போதும் அறுபதுகளின் இறுதியில் இந்திரா காந்தி முயற்சியால் அமெரிக்காவின் சி ஐ எ பாணியில் ரா உருவாக்கப்பட்டது. பங்களாதேஷ் என்ற தேசம் உருவாக ரா முக்கிய பங்காற்றியது. . பொதுவாக எல்லா உளவு அமைப்புகளும் செய்வது போல் மற்ற நாடுகளில் ரா , ஐ எஸ் ஐ தங்கள் பணிகளை மேற்கொள்கின்றன.தூதரகம்,பன்னாட்டு கம்பெனிகள் , அரசு சாரா அமைப்புகள் போன்றவற்றில் இவை ஊடுருவயுள்ளன. ஆனால் இந்தியா வில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பது ஒன்றே தலையாய பணியாக ஐ எஸ் ஐ செய்கிறது.லஷ்கர் போன்ற அமைப்புகளுக்கு பணம் பொருள் இடம், பயிற்சி கொடுத்து பயங்கரவாத செயல்களை செய்ய தூண்டுகிறது.
தற்போது பாகிஸ்தானில் உள்ள சிவிலியன் அரசால் ஐ எஸ் ஐ - ஐ கட்டுப்படுத்த இயலாது.ஆக தீவிர வாதத்தின் ஊற்றுக்கண் அங்கே இருக்கும்வரை இங்கே மும்பையில் நடந்தது போன்ற செயல்கள் தொடரும் என்றே தோன்றுகிறது.இந்தியா தற்போது செய்யவேண்டியது தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதே. நாட்டின் பாதுகாப்பின் பொறுப்பை துணிச்சலான நேர்மையான (மானேக் ஷா போன்ற )அதிகாரியிடம் கொடுக்கலாம். நல்ல நேர்மையான மனிதர்களை ஜனாதிபதி பதவியில் உட்கார வைத்து அழகு பார்ப்பதை விட அவர்களிடம் அதிகாரமுள்ள பொறுப்பை கொடுக்கலாம். ஆனால் மும்பை தாக்குதல் ஆரம்பித்த ஒரே நாளில் அடுத்த கட்சியை குற்றம் சாட்டும் பணியை ஆரம்பித்த நம் அரசியல்வாதிகளிடம் இதை எதிர்பார்க்க முடியுமா?

கிண்டர் கார்டன் கிங்கரர்கள்

ஒற்றை வரி தலைப்பிற்கு ஓராயிரம் விளக்கம் சொல்லலாம் . நான் ஒன்றே ஒன்று சொல்லபோகிறேன் .என் தேசத்தில் கல்விக்கு நேர்ந்துள்ள கேடு பற்றித்தான் பேசுகிறேன்.ஒவ்வொரு இந்தியனும் தன்னுடைய வாரிசிற்கு சிறப்பான எதிர்காலம் தர கல்விக்கு முக்கியத்துவம் தருகிறான் . ஆனால் வற்றாத ஜீவ நதிகள் இருந்தும் சுத்தமான மினரல் வாட்டருக்கு அலைவது போல் நல்ல கல்விக்கும் அலைய வேண்டிஉள்ளது .
அரசியல்வாதிகள் புண்ணியத்தில் கல்வி இன்று பணம கொளுத்த , குறைபர்வை உடைய கல்வி தந்தைகள் கையில் போய் சேர்ந்து விட்டது. அரசாங்க பள்ளிகள் குறை பிரசவ குழந்தைகள் போல் உள்ள நிலையில் பகட்டான தனியார் பள்ளிகளை நாட வேண்டிய கட்டாயம். அங்கு எல் கே ஜி வகுப்பில் சேர்க்க அவர்கள் நடத்தும் கூத்து இருக்கிறதே. ஆகா. பள்ளிவாசற்கதவு முன் சொர்கவாசல் திறக்க காத்திருக்கும் கூட்டம் போல் அர்த்த ஜாமத்தில் கூட்டம்.அதுவும் ஒரு விண்ணப்பம் ருபாய் ஐந்நூறு வரை ஒருநாள் கிரிகெட் டிக்கெட் போல் விற்று தீர்கிறது. அடுத்து இன்டெர்வியு படலம் . அப்பா அம்மா இருவரும் பட்டதாரிகள் . வீட்டில் கம்ப்யூட்டர் . போன்ற நிபந்தனைகள் . ஒரு நண்பரின் குழந்தை எல்லா தகுதி இருந்தும் தேர்வு செய்யப்படவில்லை . காரணம் அந்த குழந்தை "குழந்தை த்தனமாக" இருந்ததாம். உங்கள் குழந்தை இன்டெர் வியுவில்
சரியாக பதில் அளிக்கவில்லை என்ற காரணம் வேறு.
மூன்று வயது குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷன் என்றால் தெரியுமா ? இன்டெர் வியு என்றால் தெரியுமா? பெற்றோர் அலைகிறார்கள் பணத்தை வைத்துக்கொண்டு. நீங்கள் கேட்கலாம் . அரசு பள்ளியில் சேர்க்கலாமே என்று. பல அரசு பள்ளிகளில் ஒழுங்கான கட்டிடங்கள் இல்லை.முறையான கல்வி திட்டம் இல்லை. ஓர் அரசு பள்ளியில் வகுப்பறையில் அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து மது விருந்து கொண்டாடிய கதை ; ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி போன்ற செய்திகள் வந்தது. சாதிகொடுமைகள் வேறு . வீரமும் செல்வமும் கல்வியை ஆட்டுவிக்கின்றன.கிண்டர் கார்டன் கிங்கரகளின் தொல்லை தாங்காமல் உச்ச நீதிமன்ற படி ஏறியவர்கள் உரிய தீர்ப்பை பெற்றும் நிலைமை மாறவில்லை. ஆக ஒரு பக்கம் தரமற்ற கல்வி மறு பக்கம் "பண பரிமாற்ற" கல்வி. எங்கே போவார்கள் ஏழை குழந்தைகள் ?