வியாழன், 18 டிசம்பர், 2008

குடியும் குடித்தனமும்

பெரியவர்கள் நம்மை வாழ்த்தும் போது " குடியும் குடித்தனமுமாக இரு "என்று வாழ்த்துவார்கள். இந்தியாவில் தற்போது உள்ள பெரும்பாலான வயசுபசங்கள் மேல்சொன்ன அறிவுரையை தப்பாமல் பின் பற்றுகிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

வேகமாக பரவும் மேல் நாட்டு கலாசாரம், நல்ல சம்பாதிக்கும் வாய்ப்பு , இதர சூழ்நிலைகள் போன்றவை இவர்களை " தண்ணியில்" தள்ளுகின்றன. முக்கியமான காரணங்கள் என்று பார்த்தால்.. " அப்பா அடிச்சார் .. நானும் அடிக்கறேன்". குடும்ப பழக்கம் காரணம். "கடன் பிரச்னை - தண்ணி அடிக்கறேன் " "பொண்டாட்டி சரியில்ல " " வேலை பளு அதிகம்" " சும்மா ஜாலிக்காக குடிக்கறேன்" காரணம் ஆயிரம் .. ஆனால் ரிசல்ட் ஒன்னுதான் .

ஒரு மிடில் கிளாஸ் மனிதன் குடிப்பதனால் என்ன நாட்டுக்கு நஷ்டம் என்று கேட்கலாம். குடிப்பதனால் பணம் கரைகிறது மனம் வலு இழக்கிறது குணம் தொலைகிறது. தன்னை மறக்கிறவன் குடும்பத்தையும் நாட்டையும் மறக்கிறான் தனி மனித செயல்பாடு வீண் அடிக்கப்படுகிறது . குடும்பத்தில் பிரச்சனை விஸ்வ ரூபம் எடுக்கிறது. பரஸ்பர நம்பிக்கை தொலைகிறது.கள்ள தொடர்புகள் உருவாகின்றது. கொலை கொள்ளை நடக்கிறது. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் கூட்டம் தலை எடுக்கிறது. பச்சை குழந்தையை கொஞ்ச வேண்டியவன் பச்சை கடை எங்கே என்று தேடி அலைகிறான். தண்ணி அடித்து தலை நிக்காமல் சென்று தடுமாறி கீழே விழுந்து தன் குடும்பத்தையும் நாட்டையும் நடு தெருவிற்கு கொண்டு செல்கிறான் குடிமகன்.திறமையும் தகுதியும் உள்ளவர்கள் கடுமையாக உழைத்து தன்னையும் நாட்டையும் மேம்படுத்த வேண்டிய வயதில் வீணாக குடித்து ஒரு சந்ததியை குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள்.

ஆரம்பத்தில் ஜாலியை குடிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல தவிர்க்க முடியாத நிலையை உருவாக்குகிறது. பின் அவனது குடும்பத்தையும் பதம் பார்க்கிறது.

இதை யார் சரி செய்வது. நாம்தான். எப்படி ? தனி மனித ஒழுக்கம் மூலம் மட்டுமே .குடிப்பவர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தால் அதன் உடல் ரீதியான விளைவுகள், அதனால் குடும்பத்துக்கும் நேரும் பிரச்சனைகள் , பண விரயம் போன்றவற்றை புரியும்படி கூறலாம். சமுதாயத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் குடிகாரன் என்ற ஒரு அடையாளத்தில் அத்தனையும் அடி பட்டு போவதை தெளிவு படுத்தலாம். குடிகாரர்கள் வெருக்கதக்கவர்கள் என்பதை அவர்கள் உணரும்படி செய்யலாம்.. செய்வோம்..

வெள்ளி, 12 டிசம்பர், 2008

"தலை" யாய கடமை

வல்லரசு நாடாக உள்ள இந்தியாவை பார்த்து மற்ற நாடுகள் பொறாமை பட ஒரு சாதனை உள்ளது. பெருமை பட ஒன்றுமில்லை. இன்றைய தேதியில் உலகில் இந்தியாவில் தான் சாலை விபத்துகள் அதிகம் என்று ஒரு புள்ளி விவரம் (பி பி சி ) சொல்கிறது.ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துகளால் இந்தியா தன்னுடைய மொத்த நாட்டு உற்பத்தியில் யில் மூன்று சதவீதத்தை இழக்கிறது.சாலை விபத்துக்கள் விளைவாக ஏற்படும் சமுதாய , பொருளாதார நஷ்டங்கள் இந்தியாவில்தான் அதிகம்.எழுபது சதவீத குடும்பங்கள் சாலை விபத்து காரணமாக உடனடியாக வறுமைகோட்டுக்கு கீழ் சென்று விடுகின்றன. சர்வ சாதரணமாக ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். இருபது லட்சம் பேர் காயமடைகின்றனர்.

அரசு எய்ட்ஸ் டி பீ , மலேரியா போன்ற வியாதிகளை ஒழிக்க ஏராளமான பணத்தை செலவு செய்கிறது. ஆனால் மேற்குறிபிட்ட நோய்களில் இறப்போரை விட அதிக அளவில் சாலை விபத்தில் இந்தியர்கள் இறக்கின்றனர்.ஆனால் அரசு இந்த எண்ணிக்கை குறைக்க சீரியசான நடவடிக்கை ஏதும் எடுத்ததாக தெரியவில்லை. சாலை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நம் ஜனங்களிடம் குறைவாகவே உள்ளது. நமக்கு அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் ஒழிய அதை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

ஏன் இந்தியாவில் மட்டும் இவ்வளவு இழப்புகள்? மக்கள் தொகை அதிகம் என்ற காரணம் சொல்லி ஜோக் அடிக்காதீர்கள். இதோ பட்டியல் . உலகிலேயே இந்தியாவில்தான் லைசென்ஸ் வாங்குவது சுலபம். சாலை விதிகள் கடுமையாக அமல்படுத்துவது இல்லை. ஹெல்மட் கட்டாயம் இல்லை. ஜாலியாக குடித்து விட்டு வண்டி ஓட்டலாம். யார் மீதாவது வண்டி ஏற்றினால் கொஞ்ச .ஸ்பீட் கண்ட்ரோல் சாதனம் வைக்க எதிர்ப்பு உள்ளது. சாலைகள் மோசமாக எப்போதும் பல்லை காட்டும். முக்கால் வாசி விதிகள் கிலோ எவ்வளவு என்பார்கள். செல் போன் பேசி டிரைவிங் செய்கிறார்கள்.


ஆக யாருக்கும் பொறுப்பில்லை என்ற நிலையே உள்ளது. அட என்னதாங்க செய்கிறது ... இதோ படிங்க. அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் உயிரின் அருமையை புரிய வைக்கலாம் . விபத்து ஏற்படுத்தினால் லைசென்ஸ் ரத்து .. விபத்து ஏற்படுத்துகிறவர் அதிக இழப்பீடு தரவேண்டும் ..லைசென்ஸ் பெற குறைந்த பட்ச வயதை ஏற்றலாம்..அனைத்து வாகனங்களில் ஸ்பீட் கண்ட்ரோல் சாதனம் கட்டாயமாக்கலாம்.சிறு வயதில் சாலை பற்றிய விழிப்புணர்வை கற்று கொடுக்கலாம்.சாலைகளை நன்றாக பராமரிக்கலாம். முக்கியமாக ஹெல்மட் அணிவதை கட்டாய மாக்கலாம்... எல்லாம் செய்யலாம். யார் செய்வது.. நாம் தான். முதலில் நாம் ஹெல்மட் அணிவோம், ஒழுங்காக சாலை விதிகளை கடைபிடிப்போம்.ஏன் என்றால் எங்கேயாவது மாட்டி உயிரை விட்டு ஆவி யான பின் இந்த மாதிரி ப்ளாக் ஓபன் செய்து படிக்க எல்லாம் முடியாதுங்க. மேலும் உங்கள் இருப்பிடத்தை உங்கள் குடும்பத்தில் வேறு யாராலும் நிரப்பிட முடியாதுங்க.இந்த ப்ளாக் படித்த ஐந்து நிமிடத்தில் எத்தனை உயிர் போனதோ ? .

வியாழன், 11 டிசம்பர், 2008

எமனின் தூதர்கள்


இந்தியாவின் உறுதியான கோரிக்கையை ஏற்று இன்று பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முன்னோடி இயக்கமான ஜமாத் உத் தவா வை தடை செய்து உருப்படியான காரியத்தை செய்து உள்ளது ஐ நா சபை.ஏற்கனவே இந்த இயக்கத்தை தடை செய்ய அமெரிக்கா , பிரிட்டன்பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்த போது அதில் மூக்கை நுழைத்து காரியத்தை கெடுத்தது சீனா.ஆனால் தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து வேறு வழி இன்றி அந்த இயக்கத்தை தடை செய்துள்ளது ஐ நா. தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தின் பெயர் சிலருக்கு புதிதாக இருக்கும். ஆனால் அதன் பின்னனி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு வந்த பாலஸ்தீன நாட்டை சேர்ந்த அப்துல்லா அசம் என்பவரால் முஜ்ஜகிதீன் படைகளை உருவாக்கும் பொருட்டு உருவாக்க பட்டதுதான் மக்தாப் அல் கித்மத். சில வருடங்கள் கழித்து இவருடன் கை கோர்த்தார் தற்போது தேடப்படும் தீவிரவாதியான ஹாபிஈஸ்முஹம்மத் சயீத். பின் அசம் ஒரு வெடி தாக்குதலில் கொல்லப்பட்ட பின் தனது கவனத்தை காஷ்மீர் பக்கம் திருப்பிய சயீத் லஷ்கர் ஐ தோய்பா வினை தொடங்கினார். சவூதி பணத்துடன் ஐ எஸ் ஐ -யின் ஆசியுடன் வளர்ந்தது லஷ்கர். ஜம்மு கஷ்மீர் மட்டுமன்றி உலகின் பல பகுதியில் முன்பு முஸ்லிம்களால் ஆளப்பட்ட நாடுகளை மீட்கும் குறிக்கோள் கொண்டு தனது பணிகளை தொடங்கியது லஷ்கர். பின் இந்தியாவில் மதவாதிகள் மேற்கொண்ட பாபர் மசூதி இடிப்பு லஷ்கருக்கு அருமையான வாய்ப்பாக அமைந்தது. அந்த சம்பவத்திற்கு பின் இந்தியாவில் இருந்த இதர முஸ்லீம் அமைப்புகளுடன் சுலபமாக தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட லஷ்கர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அடுத்த வருடம் டிசம்பர் ஆறு அன்று தனது முதல் தாக்குதலாக சில ரயில் வண்டிகளை தாக்கியது.பின் வரிசையாக தாக்குதல் மேற்கொண்டு துணிச்சலாக இந்திய பாராளு மன்றத்தை தாக்கியது.தற்போது உள்ளது போன்ற உலக நாடுகளின் வலியுறுத்தலை தொடர்ந்து லஷ்கர் ஐ தடை செய்தார் முஷரப் .ஆனால் கொஞ்ச நாளில் விடுதலை பெற்ற லஷ்கர் மற்றும் மக்தாப் அல் கித்மத் தலைவர்கள் மக்தாப் அல் கித்மத் ஐ ஜமாத் உத் தவா என்று பெயர் மற்றம் செய்து பழைய பணியினை தொடர்ந்தார்கள்..பாகிஸ்தான் கட்டுபாட்டில் உள்ள காஷ்மீரில் தடை இல்லாத நிலையில் சுதந்திரமாக இயங்கின இந்த இயக்கங்கள். முந்தைய மும்பை தாக்குதல் போன்று தனது பணியினை தொடர்ந்து மேற்கொண்டன. இந்திய முஜாகிதீன்கள் என்ற பெயரில் பல தொடர் தாக்குதல்களை மேற்கொண்டன. இதற்கு சிமி போன்ற இயக்கங்கள் பக்க பலமாக இருந்தன.
அமெரிக்காவில் அல் காய்தா தாக்குதலுக்கு பின் ஆப்கன் பகுதியில் படைகள் குமிக்கபட்டதும் லஷ்கர் மற்றும் அல் காய்தா ஒரே குரலில் பேச தொடங்கின." இந்து யூதர்கள் கிறிஸ்தவர்களை முஸ்லீம் சமுதாயத்துக்கு எதிரானவர்கள் "என்ற பிரச்சாரம் வலுப்படுத்த பட்டது. முத்லில் காஷ்மீர், பின் ஒட்டு மொத்த இந்தியா என்ற அளவில் தாக்கிய இயக்கங்கள் தற்போது மும்பையில் வெளிநாட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தபட்டதின் மூலம் புதிய கோணத்தில் தனது பயங்கர வாதத்தை செயல் படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ க்கும் லஷ்கருக்கும் உள்ள தொடர்பு ஊருக்கே தெரிந்தது.இருப்பினும் இந்தியாவிற்கு எதிராக இந்த இரு சக்தி களும் கை கோர்த்துள்ளன. தற்போது ஐ நா தடை செய்த போதும் பெயரை மாற்றி கொண்டு தொடர்ந்து இவை இயங்கும் .
உலக தீவிர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் பாகிஸ்தான் திருந்தும் வரை இந்த இயக்கங்கள் புற்றீசல் போல வளரத்தான் செய்யும். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள இந்த தீவிர வாத முகாம்களை இந்தியா அழிக்காத வரை பிரச்னை தீரப்போவது இல்லை.

சனி, 6 டிசம்பர், 2008

தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்

இந்தியாவில் சென்ற வாரம் நடத்தப்பட்ட கோர தாக்குதல்களுக்கு இவர்கள் தான் பொறுப்பு என்று அனைத்து விரல்களும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தோய்பா , ஐ எஸ் ஐ போன்றவற்றை நோக்கி குற்றம்சாட்டுகின்றன..இந்தஅமைப்புகளின் பின்னணி என்ன. பார்ப்போம் வாருங்கள்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை முடிந்த கையொடு அயல்நாடுகள் தொடர்பான உளவு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ஒரு பிரிட்டிஷ் அதிகாரியால் ஏற்படுத்தப்பட்டதே ஐ எஸ் ஐ .பின்னர் அயுப் கான் போன்ற பாக் தலைவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக ஐ எஸ் ஐ - ஐ பயன்படுத்த தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் கடிவாளத்தை பிடிக்கக் கற்றுகொண்டது ஐ எஸ் ஐ. புட்டோ காலத்தில் அதன் ஆட்டம் கட்டில் இருந்தது என்றாலும் பின் ஜியா உள் ஹக் காலத்தில் ஆட்சியை ஆக்கிரமிக்க தொடங்கியது.சோவியத்- ஆப்கன் போரின்போது அமெரிக்கா தேனும் பாலும் ஊற்றி ஐ எஸ் ஐ- ஐ வளர்த்தது. பின் எண்பதுகளின் இறுதியில் காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைத்து இன்று வரை தலைவலி கொடுத்து வருகிறது.
இன்று ஐ எஸ் ஐ பாகிஸ்தானின் அரசியலில் ஒரு அசைக்க முடியாத சக்தி. எந்த தலைமையும் இதன் பிடிக்குள் கட்டுபட்டே உள்ளனர். மீறி யாராவது ஜனநாயகம் பற்றி பேசினால் பெனசிருக்கு நேர்ந்த கதி தான். இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பே ஐ பி என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட போதும் அறுபதுகளின் இறுதியில் இந்திரா காந்தி முயற்சியால் அமெரிக்காவின் சி ஐ எ பாணியில் ரா உருவாக்கப்பட்டது. பங்களாதேஷ் என்ற தேசம் உருவாக ரா முக்கிய பங்காற்றியது. . பொதுவாக எல்லா உளவு அமைப்புகளும் செய்வது போல் மற்ற நாடுகளில் ரா , ஐ எஸ் ஐ தங்கள் பணிகளை மேற்கொள்கின்றன.தூதரகம்,பன்னாட்டு கம்பெனிகள் , அரசு சாரா அமைப்புகள் போன்றவற்றில் இவை ஊடுருவயுள்ளன. ஆனால் இந்தியா வில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பது ஒன்றே தலையாய பணியாக ஐ எஸ் ஐ செய்கிறது.லஷ்கர் போன்ற அமைப்புகளுக்கு பணம் பொருள் இடம், பயிற்சி கொடுத்து பயங்கரவாத செயல்களை செய்ய தூண்டுகிறது.
தற்போது பாகிஸ்தானில் உள்ள சிவிலியன் அரசால் ஐ எஸ் ஐ - ஐ கட்டுப்படுத்த இயலாது.ஆக தீவிர வாதத்தின் ஊற்றுக்கண் அங்கே இருக்கும்வரை இங்கே மும்பையில் நடந்தது போன்ற செயல்கள் தொடரும் என்றே தோன்றுகிறது.இந்தியா தற்போது செய்யவேண்டியது தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதே. நாட்டின் பாதுகாப்பின் பொறுப்பை துணிச்சலான நேர்மையான (மானேக் ஷா போன்ற )அதிகாரியிடம் கொடுக்கலாம். நல்ல நேர்மையான மனிதர்களை ஜனாதிபதி பதவியில் உட்கார வைத்து அழகு பார்ப்பதை விட அவர்களிடம் அதிகாரமுள்ள பொறுப்பை கொடுக்கலாம். ஆனால் மும்பை தாக்குதல் ஆரம்பித்த ஒரே நாளில் அடுத்த கட்சியை குற்றம் சாட்டும் பணியை ஆரம்பித்த நம் அரசியல்வாதிகளிடம் இதை எதிர்பார்க்க முடியுமா?

கிண்டர் கார்டன் கிங்கரர்கள்

ஒற்றை வரி தலைப்பிற்கு ஓராயிரம் விளக்கம் சொல்லலாம் . நான் ஒன்றே ஒன்று சொல்லபோகிறேன் .என் தேசத்தில் கல்விக்கு நேர்ந்துள்ள கேடு பற்றித்தான் பேசுகிறேன்.ஒவ்வொரு இந்தியனும் தன்னுடைய வாரிசிற்கு சிறப்பான எதிர்காலம் தர கல்விக்கு முக்கியத்துவம் தருகிறான் . ஆனால் வற்றாத ஜீவ நதிகள் இருந்தும் சுத்தமான மினரல் வாட்டருக்கு அலைவது போல் நல்ல கல்விக்கும் அலைய வேண்டிஉள்ளது .
அரசியல்வாதிகள் புண்ணியத்தில் கல்வி இன்று பணம கொளுத்த , குறைபர்வை உடைய கல்வி தந்தைகள் கையில் போய் சேர்ந்து விட்டது. அரசாங்க பள்ளிகள் குறை பிரசவ குழந்தைகள் போல் உள்ள நிலையில் பகட்டான தனியார் பள்ளிகளை நாட வேண்டிய கட்டாயம். அங்கு எல் கே ஜி வகுப்பில் சேர்க்க அவர்கள் நடத்தும் கூத்து இருக்கிறதே. ஆகா. பள்ளிவாசற்கதவு முன் சொர்கவாசல் திறக்க காத்திருக்கும் கூட்டம் போல் அர்த்த ஜாமத்தில் கூட்டம்.அதுவும் ஒரு விண்ணப்பம் ருபாய் ஐந்நூறு வரை ஒருநாள் கிரிகெட் டிக்கெட் போல் விற்று தீர்கிறது. அடுத்து இன்டெர்வியு படலம் . அப்பா அம்மா இருவரும் பட்டதாரிகள் . வீட்டில் கம்ப்யூட்டர் . போன்ற நிபந்தனைகள் . ஒரு நண்பரின் குழந்தை எல்லா தகுதி இருந்தும் தேர்வு செய்யப்படவில்லை . காரணம் அந்த குழந்தை "குழந்தை த்தனமாக" இருந்ததாம். உங்கள் குழந்தை இன்டெர் வியுவில்
சரியாக பதில் அளிக்கவில்லை என்ற காரணம் வேறு.
மூன்று வயது குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷன் என்றால் தெரியுமா ? இன்டெர் வியு என்றால் தெரியுமா? பெற்றோர் அலைகிறார்கள் பணத்தை வைத்துக்கொண்டு. நீங்கள் கேட்கலாம் . அரசு பள்ளியில் சேர்க்கலாமே என்று. பல அரசு பள்ளிகளில் ஒழுங்கான கட்டிடங்கள் இல்லை.முறையான கல்வி திட்டம் இல்லை. ஓர் அரசு பள்ளியில் வகுப்பறையில் அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து மது விருந்து கொண்டாடிய கதை ; ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி போன்ற செய்திகள் வந்தது. சாதிகொடுமைகள் வேறு . வீரமும் செல்வமும் கல்வியை ஆட்டுவிக்கின்றன.கிண்டர் கார்டன் கிங்கரகளின் தொல்லை தாங்காமல் உச்ச நீதிமன்ற படி ஏறியவர்கள் உரிய தீர்ப்பை பெற்றும் நிலைமை மாறவில்லை. ஆக ஒரு பக்கம் தரமற்ற கல்வி மறு பக்கம் "பண பரிமாற்ற" கல்வி. எங்கே போவார்கள் ஏழை குழந்தைகள் ?