ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

உறவுகள் ..

முன்னால் ஜனாதிபதி வெங்கடராமன் அவர்கள் இறந்தது தொடர்பான செய்திகள் சென்ற வாரம் பத்திரிகைகளில் வந்தது. சரி ஒரு நல்ல தலைவர், வயது மூப்பில் இறந்துவிட்டார் என்ற எண்ணத்தோடு நம் வருத்தத்துடன் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டோம். ஆனால் மேற்படி செய்தியோடு இணைந்து வந்த ஒரு புகைப்படம் என்னை சற்று பாதித்தது. அந்த படத்தில் மறைந்த வெங்கடராமன் அவர்களின் பூத உடலுக்கு தீ மூட ஏற்பாடுகள் நடக்கின்றது. புகைப்படத்தின் ஓரமாக கவனியுங்கள். அவர் மனைவி தன்னுடைய ஊன்றுகோலின் உதவியுடன் உடைந்து போய் இருப்பதை.

மறைந்தவரின் இழப்பை பல பக்கங்கள் சொல்லாத செய்தியை அந்த புகைப்படம் சொல்கிறது. பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த தம்பதியரின் வாழ்க்கையை அது சொல்கிறது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் முதிர்ச்சியை சொல்கிறது.
நம்மில் பலர் உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதில்லை. ஒரு மனிதர் நம்மிடம் பழகும் போது அவரை பற்றிய எண்ணங்களும் நம்மில் பதிகின்றன. அவர் உயர்ந்தவர் , நல்லவர், கெட்டவர் என்ற மதிப்பீடும் பதியபடுகின்றது. அவரின் திடீர் இழப்பு அவர் மேல் நம் வைத்திருந்த மதிப்பீடின் அடிப்படையில் நம்மை பாதிக்கின்றது . நண்பர்கள், கூட பணியாற்றுபவர்கள், உறவினர்கள் போன்றோர் பல வட்டங்களாக பழகினாலும் சிலருக்கு பத்து வருடம் முன் பார்த்த நண்பன் திடீர் என்று முன் வரும் சந்தோசத்தை எப்போதும் கூட உள்ள மனைவி தருவதில்லை. வாழ்வின் நடுவின் கொஞ்ச நேரம் வரும் சில உறவுகள் நம்மை உருவாக்கிய பெற்றோரை விட அதிக மகிழ்ச்சியை தருகின்றன. இது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுகின்றது.
வாழ்கையில் நமக்கு கிடைக்கும் பதவிகள் , பொறுப்புகள், பொருள் போன்றவை ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல நீங்கி விடுகின்றன. உறவுகள் என்றும் தொடர்கின்றன. வாழ்கையின் இறுதி படிக்கட்டுகளில் இறங்கும் போது உறவுகளே நம்மை தாங்கி பிடிக்கின்றன. அதில் முக்கியமானது மனைவி (பெண்களுக்கு கணவர்) மற்றும் நண்பர்கள். நம்மை நன்கு புரிந்து கொள்ளக்கொடிய உறவுகள். உலகின் மிக பலம் வாய்ந்த நாட்டின் தளமே பொறுப்பில் இருந்து விலகிய பின் புஷ் " இனி என்ன செய்ய போகிறீர்கள் ?" என்ற கேள்விக்கு சொன்ன பதில். " இனி என் மனைவி போட்டு தரும் காபியை ரசித்து குடிப்பேன். என் வீட்டு பராமரிப்பை பார்ப்பேன். என் நாயுடன் கொஞ்சுவேன்". எவ்வளவு பெரிய மனிதரும் இறுதியில் உறவுகளை தேடித்தான் போகிறார்கள். நம் நாட்டின் பிரதமருக்கு இதய சிகிச்சை முடிந்ததும் குடும்பத்தினர் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மட்டுமே அவருக்கு உடனடி மகிழ்ச்சியை தர முடியும் என்பதால்.
ஒரு மனிதனின் கடைசி எண்ணம் தன் உறவுகளை பற்றித்தான் இருக்கும். உறவுகளே ஒரு மனிதனை அதிகம் பாதிக்கின்றது. உங்களின் உறவுகளை புதுப்பியுங்கள். அவர்களுக்கென்று நேரம் ஒதுக்குங்கள். குறைந்த பட்சம் இரவில் உங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சாப்பிடுங்கள். நல்ல உறவுகள் உங்கள் ஆரோக்கியம், ஆயுள் கூட உதவும்..

4 கருத்துகள்:

Maximum India சொன்னது…

//நம்மில் பலர் உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதில்லை.///

உண்மைதான். எப்போதும் இலவசமாக கிடைக்கிற எந்த விஷயத்தின் மதிப்பும் குறைவாகவே இருக்கும். கிடைப்பதற்கரிய பொருட்களின் மதிப்பே எப்போதும் அதிகமாக இருக்கும். எனவேதான், உறவின் மதிப்பு பிரிவிலேயே தெரிகிறது. ஆனால், கூட இருக்கும் போதே மதிக்கப் படுகிற உறவுகள் உன்னதமானவை. என்றும் நிலைத்திருக்க கூடியவை.

//வாழ்கையில் நமக்கு கிடைக்கும் பதவிகள் , பொறுப்புகள், பொருள் போன்றவை ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல நீங்கி விடுகின்றன. உறவுகள் என்றும் தொடர்கின்றன. வாழ்கையின் இறுதி படிக்கட்டுகளில் இறங்கும் போது உறவுகளே நம்மை தாங்கி பிடிக்கின்றன.//

நிச்சயமாக. மனமும் உடலும் தளரும் போது உறவு எனும் ஊன்றுகோல் தேவைப் படுகிறது.

//உங்களின் உறவுகளை புதுப்பியுங்கள். அவர்களுக்கென்று நேரம் ஒதுக்குங்கள். குறைந்த பட்சம் இரவில் உங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சாப்பிடுங்கள். நல்ல உறவுகள் உங்கள் ஆரோக்கியம், ஆயுள் கூட உதவும்.. //

நல்ல கருத்துக்கள். இயந்திரகதியான தற்போதைய சூழலில் வாழ்வை தொலைத்திருப்போருக்கு அதை மீட்டு தருவது உறவுகளே. மேலும் இந்த பொருளாதார பின்னடைவால் தளர்ந்திருப்போருக்கு அன்பெனும் மருந்திட்டு குணப் படுத்துவதும் உறவுகளே.

என்னுடைய தரப்பிலிருந்து மேலும் ஒரு வேண்டுகோள். உறவுகளை உங்களது சிறு குடும்பத்தோடு சுருக்கிக் கொள்ளாதீர்கள். அதை விரிவு படுத்துங்கள்.

நம்முடைய பழங்காலமாகிய தளர்ந்திருக்கும் பெரியவர்களுக்கு ஆறுதலாகவும் ஊன்றுகோலாகவும் இருங்கள்.

மீண்டுமொரு சிறந்த பதிவிற்கு வாழ்த்துக்கள்.

பொதுஜனம் சொன்னது…

நன்றி . வாழ்க்கை முடிவில்லாத டெஸ்ட் மேட்ச் போன்றது.. விக்கெட்டுகள் விழ விழ புதிய உறவுகள் தோன்றிக்கொண்டே இருக்கும்.. அதை அனுபவித்து போய்க்கொண்டே இருக்கே வேண்டியதுதான்..

கபீஷ் சொன்னது…

நல்ல பதிவு!!! பலருக்குத் தேவையானதும் கூட. (நான் ரொம்ப நல்ல பிள்ளை இந்த விஷயத்தில்:-)

பொதுஜனம் சொன்னது…

நன்றி கபீஷ்.