வியாழன், 11 டிசம்பர், 2008

எமனின் தூதர்கள்


இந்தியாவின் உறுதியான கோரிக்கையை ஏற்று இன்று பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முன்னோடி இயக்கமான ஜமாத் உத் தவா வை தடை செய்து உருப்படியான காரியத்தை செய்து உள்ளது ஐ நா சபை.ஏற்கனவே இந்த இயக்கத்தை தடை செய்ய அமெரிக்கா , பிரிட்டன்பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்த போது அதில் மூக்கை நுழைத்து காரியத்தை கெடுத்தது சீனா.ஆனால் தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து வேறு வழி இன்றி அந்த இயக்கத்தை தடை செய்துள்ளது ஐ நா. தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தின் பெயர் சிலருக்கு புதிதாக இருக்கும். ஆனால் அதன் பின்னனி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு வந்த பாலஸ்தீன நாட்டை சேர்ந்த அப்துல்லா அசம் என்பவரால் முஜ்ஜகிதீன் படைகளை உருவாக்கும் பொருட்டு உருவாக்க பட்டதுதான் மக்தாப் அல் கித்மத். சில வருடங்கள் கழித்து இவருடன் கை கோர்த்தார் தற்போது தேடப்படும் தீவிரவாதியான ஹாபிஈஸ்முஹம்மத் சயீத். பின் அசம் ஒரு வெடி தாக்குதலில் கொல்லப்பட்ட பின் தனது கவனத்தை காஷ்மீர் பக்கம் திருப்பிய சயீத் லஷ்கர் ஐ தோய்பா வினை தொடங்கினார். சவூதி பணத்துடன் ஐ எஸ் ஐ -யின் ஆசியுடன் வளர்ந்தது லஷ்கர். ஜம்மு கஷ்மீர் மட்டுமன்றி உலகின் பல பகுதியில் முன்பு முஸ்லிம்களால் ஆளப்பட்ட நாடுகளை மீட்கும் குறிக்கோள் கொண்டு தனது பணிகளை தொடங்கியது லஷ்கர். பின் இந்தியாவில் மதவாதிகள் மேற்கொண்ட பாபர் மசூதி இடிப்பு லஷ்கருக்கு அருமையான வாய்ப்பாக அமைந்தது. அந்த சம்பவத்திற்கு பின் இந்தியாவில் இருந்த இதர முஸ்லீம் அமைப்புகளுடன் சுலபமாக தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட லஷ்கர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அடுத்த வருடம் டிசம்பர் ஆறு அன்று தனது முதல் தாக்குதலாக சில ரயில் வண்டிகளை தாக்கியது.பின் வரிசையாக தாக்குதல் மேற்கொண்டு துணிச்சலாக இந்திய பாராளு மன்றத்தை தாக்கியது.தற்போது உள்ளது போன்ற உலக நாடுகளின் வலியுறுத்தலை தொடர்ந்து லஷ்கர் ஐ தடை செய்தார் முஷரப் .ஆனால் கொஞ்ச நாளில் விடுதலை பெற்ற லஷ்கர் மற்றும் மக்தாப் அல் கித்மத் தலைவர்கள் மக்தாப் அல் கித்மத் ஐ ஜமாத் உத் தவா என்று பெயர் மற்றம் செய்து பழைய பணியினை தொடர்ந்தார்கள்..பாகிஸ்தான் கட்டுபாட்டில் உள்ள காஷ்மீரில் தடை இல்லாத நிலையில் சுதந்திரமாக இயங்கின இந்த இயக்கங்கள். முந்தைய மும்பை தாக்குதல் போன்று தனது பணியினை தொடர்ந்து மேற்கொண்டன. இந்திய முஜாகிதீன்கள் என்ற பெயரில் பல தொடர் தாக்குதல்களை மேற்கொண்டன. இதற்கு சிமி போன்ற இயக்கங்கள் பக்க பலமாக இருந்தன.
அமெரிக்காவில் அல் காய்தா தாக்குதலுக்கு பின் ஆப்கன் பகுதியில் படைகள் குமிக்கபட்டதும் லஷ்கர் மற்றும் அல் காய்தா ஒரே குரலில் பேச தொடங்கின." இந்து யூதர்கள் கிறிஸ்தவர்களை முஸ்லீம் சமுதாயத்துக்கு எதிரானவர்கள் "என்ற பிரச்சாரம் வலுப்படுத்த பட்டது. முத்லில் காஷ்மீர், பின் ஒட்டு மொத்த இந்தியா என்ற அளவில் தாக்கிய இயக்கங்கள் தற்போது மும்பையில் வெளிநாட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தபட்டதின் மூலம் புதிய கோணத்தில் தனது பயங்கர வாதத்தை செயல் படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ க்கும் லஷ்கருக்கும் உள்ள தொடர்பு ஊருக்கே தெரிந்தது.இருப்பினும் இந்தியாவிற்கு எதிராக இந்த இரு சக்தி களும் கை கோர்த்துள்ளன. தற்போது ஐ நா தடை செய்த போதும் பெயரை மாற்றி கொண்டு தொடர்ந்து இவை இயங்கும் .
உலக தீவிர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் பாகிஸ்தான் திருந்தும் வரை இந்த இயக்கங்கள் புற்றீசல் போல வளரத்தான் செய்யும். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள இந்த தீவிர வாத முகாம்களை இந்தியா அழிக்காத வரை பிரச்னை தீரப்போவது இல்லை.

1 கருத்து:

Maximum India சொன்னது…

இந்த தீவிரவாதம் இந்தியாவிற்கு மட்டும் எதிரியல்ல. உலகத்திற்கே எதிரி என்று அனைத்து நாடுகளும் புரிந்துக் கொள்ள வேண்டும்.